ஆன்லைன் விளையாட்டான ‘ப்ரீ பயர்’ (Free Fire) மூலம் உருவான காதலுக்காக, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாய், சுமார் 2,100 கிமீ பயணம் செய்து பஞ்சாப்பின் அபோஹர் நகருக்குச் சென்றுள்ளார். கணவரை இழந்த இந்த 26 வயது பெண், 19 வயதான சோனு என்ற இளைஞருடன் வாழத் தீர்மானித்துள்ளார். மகளைக் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கர்நாடக போலீசார் பஞ்சாப் வரை தேடிச் சென்றனர். ஆனால், “தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், காதலுக்காகவுமே இங்கு வந்தேன்; என்னால் மீண்டும் வர முடியாது” என அந்தப் பெண் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால், போலீசார் வெறும் கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த இளைஞனின் குடும்பம் ஒரு வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு பெல்புரி விற்றுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். சோனுவின் தாயோ, “என் மகன் சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்குப் போதும்” என்று கூறி அந்தப் பெண்ணை ஏற்றுக்கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைன் கேம் மூலம் தொடங்கிய இந்தப் பழக்கம், இன்று ஒரு குடும்பத்தையே கர்நாடகாவிலிருந்து பஞ்சாப் வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
