சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த ‘கேட்’ (GATE) தேர்வில், ப்ளூடூத் கருவிகளைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பொறியியல் பட்டதாரிகள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்வு மையம் அருகே ஒரு டீக்கடையில் ‘கண்ட்ரோல் ரூம்’ அமைத்து, அங்கிருந்தபடி தேர்வர்களுக்கு விடைகளைச் சொல்லிக்கொடுத்தது அம்பலமாகியுள்ளது. காதுக்குள்ளும் ஷூக்களுக்குள்ளும் மிகச்சிறிய ப்ளூடூத் கருவிகளை மறைத்து வைத்து, வெளியே இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு கேள்விகளை வாசித்து விடைகளைப் பெற்றுள்ளனர். ஒரு பேப்பருக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி இந்த மோசடி நடந்துள்ளது.

​போலீசார் நடத்திய சோதனையில் மைக்ரோ ப்ளூடூத் இயர்போன்கள், 8 மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் தர்ஷன் ஷெராவக், நரேந்திர குமார் மற்றும் பண்டி குமார் ஆகியோர் வெளியே இருந்து உதவியுள்ளனர்; சுமித், லக்ஷ்மி நாராயண் மற்றும் அமர் சந்திரா ஆகியோர் தேர்வர்களாக உள்ளே இருந்துள்ளனர். இவர்கள் மீது புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் மற்றும் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.