விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த வழக்கு இப்போது சிபிஐ (CBI) வசம் செல்லவுள்ளது. அஜித் பவாரின் மரணத்தில் சதி இருக்கலாம் என காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) ஏற்கனவே சந்தேகம் எழுப்பியிருந்தன. மேலும், இந்த விசாரணை மந்தமாக நடப்பதாக அஜித் பவாரின் மருமகன் ரோஹித் பவாரும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மரணத்தில் உள்ள மர்மங்களை உடைக்க சிபிஐ விசாரணை வேண்டும் என அஜித் பவாரின் மனைவியும், துணை முதலமைச்சருமான சுனேத்ரா பவார் மற்றும் அவரது கட்சியின் முக்கிய தலைவர்கள், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிடம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை அளித்துள்ளனர். இந்த அதிரடி நகர்வு மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.
