கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கப்பன் பூங்காவில், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை பலகையை அவமதிக்கும் வகையில் தம்பதியினர் நடந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் பூங்காவிற்கு வந்த கியாதி ஸ்ரீ மற்றும் அவரது கணவர் ஷாபாஸ் அன்சார் ஆகியோர், “இங்கு முத்தம் கொடுக்கத் தடை, மீறினால் அபராதம் விதிக்கப்படும்” என்று எழுதப்பட்டிருந்த எச்சரிக்கை பலகையின் முன்பே நின்று முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்தச் செயலை வீடியோவாகப் பதிவு செய்து அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்காகப் பொது விதிகளையும், பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டுப்பாடுகளையும் அலட்சியப்படுத்திய அந்தத் தம்பதியின் செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பூங்காவின் மாண்பைக் குலைக்கும் வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது தவறானது என்றும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக விதிகளை மீறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் சமூக வலைதளப் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், பொது இடங்களில் இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் தேவையா என்ற விவாதமும் ஒருபுறம் எழுந்துள்ளது.