திருநின்றவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், ஐடி ஊழியர் எனக்கூறிய பெண் ஒருவர் மேடையில் தாலியை கழற்றி எறிந்து நீதி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த அந்தப் பெண், தனக்கு குடும்பத்தினருடனும் கணவருடனும் வாழ விருப்பமில்லை என்றும், தனக்கு நீதி வேண்டும் என்றும் கூறி கூச்சலிட்டார்.
தான் ஒரு தங்கப் பதக்கம் வென்ற ஐடி ஊழியர் எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் கடுமையாக உழைத்ததாகவும், தற்போது தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஆவேசமாகப் பேசினார். தான் அம்பத்தூர் காவல் நிலையத்திலிருந்து தப்பித்து வந்ததாக அவர் கூறியதைக் கேட்டு அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனே பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல்துறையினர் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி மேடையிலிருந்து கீழே அழைத்துச் சென்றனர்.இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு மனநல பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அவரது உறவினர்களும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அரசியல் மேடையில் எதிர்பாராத விதமாக நடந்த இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
