பெங்களூரு ஹென்னூர் பகுதியில் சனிக்கிழமை இரவு சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய தம்பதியினர், நான்கு வயது குழந்தையை வாடகை காரிலேயே மறந்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்கான் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் அயர்ந்து தூங்கியுள்ளார்.
பொன்னப்பா லேஅவுட் பகுதியில் உள்ள தங்கள் குடியிருப்பு வந்தவுடன், அவசரத்தில் குழந்தையை கவனிக்காமல் தம்பதியினர் இறங்கிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து குழந்தை காணவில்லை என்பதை உணர்ந்த பெற்றோர், உடனடியாக அவசர உதவி எண்ணான 112-க்கு அழைத்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே ஹென்னூர் போலீசார் களமிறங்கி, தொழில்நுட்ப உதவியுடன் காரின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநரைத் தொடர்பு கொண்ட போலீசார், பின் இருக்கையில் குழந்தை தூங்குவதை உறுதி செய்ததோடு, குழந்தையை எழுப்பாமல் நேரடியாக குறிப்பிட்ட முகவரிக்கு வருமாறு அறிவுறுத்தினர்.
ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் இந்த மின்னல் வேக நடவடிக்கையைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், குழந்தையைக் கையாளுவதில் பெற்றோரின் இத்தகைய அலட்சியமான போக்கு சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
