பெங்களூரில் ஒரு குடும்பம் செய்த மிகப்பெரிய ஒரு மறதி, அந்தப் பகுதியையே சில மணிநேரம் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு குடும்பத்தினர் வாடகை காரில் பயணம் செய்துவிட்டு தங்கள் வீட்டுக்கு வந்து இறங்கியுள்ளனர். வீட்டுக்குள் சென்ற பிறகுதான், காரின் பின் இருக்கையில் 4 வயது சிறுவன் தூங்கிக்கொண்டிருந்ததையும், அவனை அங்கேயே விட்டுவிட்டு வந்ததையும் கவனித்துள்ளனர். அந்தச் சிறுவன் தூக்கத்தில் இருந்ததால், அவனும் எழவில்லை, வண்டி ஓட்டுநரும் கவனிக்கவில்லை. பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக போலீசாரைத் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளனர்.

​போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அந்த கார் தொடர்பான விவரங்களைச் சேகரித்து ஓட்டுநரை போன் மூலம் தொடர்பு கொண்டனர். “உங்க வண்டிக்குள்ள ஒரு குழந்தை இருக்கு பாருங்க” என்று போலீசார் சொன்னதும், பின் இருக்கையைப் பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். உடனடியாக காரைத் திருப்பிக்கொண்டு வந்து, குடும்பத்தினர் இறங்கிய இடத்திலேயே சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தார். அந்தச் சிறுவன் தூக்கம் கலையாமலேயே பெற்றோரிடம் சேர்ந்தது பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.