மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் ராம்பூர் பாகேலான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவமௌ ஜிரியா தோலா கிராமத்தில், உறவை கொச்சைப்படுத்தும் வகையில் பேரனே தனது பாட்டியைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபகதூர் ராவத் என்பவரின் 20 வயது மகன் கயாமத் ராவத், தனது 25 வயது மாமியான பாரதி என்கிற காஞ்சனுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி இவர்களது முறையற்ற தொடர்பை கயாமத்தின் பாட்டியான ருக்மணி ஆதிவாசி நேரில் கண்டுள்ளார். இதனால் குடும்பத்திலும் சமூகத்திலும் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று அஞ்சிய மாமியும் மருமகனும், பாட்டியைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று ருக்மணி இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, கயாமத் ராவத் அவரைப் பின்தொடர்ந்து சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். தனது கையில் அணிந்திருந்த காப்பினால் பாட்டியின் முகத்தில் பலமுறை தாக்கியதுடன், கம்பியால் அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு சடலத்தைப் புதருக்குள் மறைத்து வைத்துள்ளார்.
மாயமான ருக்மணியின் சடலம் அடுத்த நாள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சைபர் செல்லின் உதவியுடன் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், சந்தேகத்தின் பேரில் மாமி மற்றும் பேரனைப் பிடித்து விசாரித்தபோது இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
