மும்பையைச் சேர்ந்த ரூமா எஸ் பௌமிக் என்ற பெண், தனது 31-வது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பாத்ரூம் ஜன்னலுக்கு வெளியே இருந்த தேன்கூட்டை அகற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், பூச்சிக் கட்டுப்பாட்டு (Pest Control) ஊழியர்கள் ரசாயன ஸ்ப்ரே மற்றும் புகையைப் பயன்படுத்தி தேன்கூட்டை அகற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. “இரு தரப்புக்கும் இது நல்லதல்ல” என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்ட இந்த வீடியோ, இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோவின் இறுதியில் அந்தத் தேன்கூடு அகற்றப்பட்டிருந்தாலும், ஜன்னல் ஓரம் ஏராளமான தேனீக்கள் இறந்து கிடப்பது போன்ற காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “தேனீக்களைக் கொல்லாமல் பாதுகாப்பாக இடமாற்றம் செய்திருக்கலாம், இது தவறான முறை” எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “தேனீக்கள் இருப்பதால்தான் இந்த உலகம் பசுமையாக இருக்கிறது” எனச் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதே சமயம், தங்களுக்கு இருக்கும் இதே போன்ற தேன்கூடு பிரச்சினையைத் தீர்க்க அந்த பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் முகவரியைக் கேட்டுச் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொத்தத்தில், ஒரு தேன்கூடு அகற்றும் பணி சமூக வலைதளங்களில் “அப்சல்யூட் சினிமா” ரேஞ்சுக்கு விவாதிக்கப்பட்டு வருகிறது.
