விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி சுதாகர் தனது தீர்ப்பை வாசித்துள்ளார். அப்போது, முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதைக் கேட்டதும், அங்கிருந்த பாலமுருகன் என்பவர் கடும் ஆத்திரமடைந்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென நீதிபதியை நோக்கி வீசியதால், நீதிமன்ற அறையே ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனது.
இந்தத் தாக்குதல் முயற்சியில் அதிர்ஷ்டவசமாக நீதிபதி சுதாகர் எவ்வித காயமுமின்றி தப்பினார். உடனடியாக அங்கிருந்த வழக்கறிஞர்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் பாலமுருகனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் ஆயுதத்துடன் ஒருவர் நுழைந்து நீதிபதியையே தாக்க முயன்ற இந்தச் சம்பவம், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பெரிய கேள்விக்குறியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
