தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முக்கியக் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகர், சென்னையில் நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்துத் தன்னைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள சூழலில், பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தவெகவில் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகர், தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமியின் சகோதரர் என்பதால், இந்தத் தாவல் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒருசேர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
புதிய வரவுகள் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனைகள் மூலம் தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த இணைப்பு அக்கட்சிக்குத் தென் மாவட்டங்களில் கூடுதல் பலத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
