தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையிலான “ஆட்சியில் பங்கு” விவகாரம் தற்போது உச்சகட்ட மோதலாக மாறியுள்ளது. மதுரையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், திமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படாவிட்டால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் எனப் பல நிர்வாகிகள் பகிரங்கமாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் திமுக மைனாரிட்டி நிலைக்குத் தள்ளப்படும் என்றும், அந்தச் சூழலில் விஜய்யுடன் கைகோர்த்தால் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் நிர்வாகிகள் ஆவேசமாகப் பேசியுள்ளனர்.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று கூறிய பின்னரும், காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் கோரிக்கையில் பிடிவாதமாக உள்ளனர். “ஆட்சியில் பங்கு என்பது எங்கள் உரிமை; அதைத் தராவிட்டால் மக்கள் முடிவு செய்வார்கள்” என மாணிக்கம் தாகூர் எம்.பி முன்னிலையிலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக தங்களை வம்படியாக வெளியே தள்ளப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டிய நிர்வாகிகள், இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை என்றும், வெற்றியோ தோல்வியோ விஜய்யுடன் இணைந்து பார்த்துவிடுவோம் என்றும் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.