தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகள் ஒருபுறம் தயாராகி வர, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

இந்தச் சூழலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் நிலவரம் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். 2006 தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட, 2026-ல் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அவர் கணித்துள்ளார்.

அன்று விஜயகாந்த் எனும் புயல் 60 கி.மீ வேகத்தில் வீசியது என்றால், இன்று விஜய் எனும் புயல் 100 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், இது திமுகவுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யைப் புகழ்ந்து பேசுவதால் அவருடன் கூட்டணி அமைக்கப்போவதாக அர்த்தமில்லை என்று தெளிவுபடுத்திய பிரேமலதா, அதிமுக-வை ஊழல் கட்சி என விஜய் விமர்சித்தபோது முதலில் தட்டிக்கேட்டது தான் தான் என்று நினைவுபடுத்தினார்.

மேலும், விஜய்யின் வருகையைக் கண்டு திமுக அஞ்சுவதாகக் குறிப்பிட்ட அவர், முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் விஜய்யின் பெயரைக் கூடச் சொல்லப் பயப்படுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

விஜயகாந்த் பாணியில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா அல்லது புதிய அரசியலை முன்னெடுப்பாரா என்ற விவாதம் தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.