2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்து வருகிறது. திமுக தரப்பில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பொதுவெளியில் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், திமுக அமைச்சர்கள் காங்கிரஸை மதிக்கவில்லை என்றும், தங்களுக்குத் தன்மானமே முக்கியம் என்றும் மாணிக்கம் தாகூர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொருபுறம், காங்கிரஸ் மேலிட நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி திமுகவின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இத்திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியைத் தந்துவிடாது என்றும், இதே போன்ற திட்டங்களை அறிவித்த பல மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் தோல்வியடைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டணிக்குள் இருந்துகொண்டே காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவது, இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசலை அதிகப்படுத்தியுள்ளது. இது தேர்தல் நேரத்தில் தொகுதிப் பங்கீட்டிலும், கூட்டணி உறவிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.