வழக்கமான மருத்துவர்கள் செய்யும் அறுவை சிகிச்சைக்கே பல நேரங்களில் ஆபத்து ஏற்படும் நிலையில், தகுதியற்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத சிசேரியன் ஒரு உயிரைப் பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்குப் போதிய மருத்துவப் படிப்பு இல்லாத 12-ஆம் வகுப்பு மாணவன் மற்றும் ஒரு கலைப்பிரிவு பட்டதாரி ஆகிய இருவர் இணைந்து சி-செக்ஷன் செய்துள்ளனர்.
மேலும் உரிய மருத்துவக் கட்டமைப்பு மற்றும் அனுபவம் இல்லாத சூழலில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் விளைவாக, ரத்தப்போக்கு அதிகமாகி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், அந்த இரு இளைஞர்களையும் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு மருத்துவமனையில் முறையான மருத்துவர்கள் இல்லாத நிலையில், இவர்கள் எவ்வாறு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்குத் துணிந்தார்கள் என்பது குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய போலி மருத்துவர்களால் தான் இத்தகைய சூழல் ஏற்படுகிறது.
இதனால் முறையான அனுமதியின்றி இயங்கும் கிளினிக்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
