சென்னை பெரம்பூர் பகுதியில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த பெண்ணை செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர், தனது வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வழக்கம்போல மறைவான இடத்தில் வைத்துவிட்டுச் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், அந்தச் சாவியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சோரி பகுதியைச் சேர்ந்த இந்துமதி என்பதைக் கண்டறிந்தனர்.
மேலும் விசாரணையில், கைதான இந்துமதி ரயிலில் சென்னைக்கு வந்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளைக் கண்காணிப்பதையும், குறிப்பாக வீட்டு உரிமையாளர்கள் சாவியை எங்கு மறைத்து வைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு கைவரிசை காட்டுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவரிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் ஏற்கனவே அரக்கோணம், போளூர் மற்றும் மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இது போன்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனையடுத்து இந்துமதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
