கேரளாவில் தந்தையும் மகளும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில், உயிரிழந்த சிறுமி கடந்த ஒரு வருடமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு வீட்டில் தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
மேலும் தந்தை தற்கொலை செய்துகொண்ட நிலையில், சிறுமியின் மரணத்தில் மர்மம் நீடித்தது. இதையெடுத்து நடத்தப்பட்ட விரிவான உடற்கூறு ஆய்வில், அந்தச் சிறுமி நீண்ட காலமாகத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது வழக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை, இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது. தந்தையின் தற்கொலைக்கும் சிறுமியின் மரணத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
