மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்து முடிக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் திடீரென உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில், கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நேரிட்ட டைனமைட் வெடி விபத்தில் 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாம் பாபு சின்ஹா (44) என்பவரும் ஒருவர் எனத் தகவல்கள் வெளியாகின.
விபத்தில் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு சடலத்தைப் பார்த்த ஷியாம் பாபுவின் உறவினர்கள், அது அவர்தான் என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து, அந்த சடலம் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
திகைப்பில் உறவினர்கள்
இந்நிலையில், உயிரிழந்ததாகக் கருதப்பட்ட ஷியாம் பாபு சின்ஹா, சில தினங்களுக்குப் பிறகு திடீரெனத் தனது வீட்டிற்கு நேரில் வந்து நின்றார். அவரைப் பார்த்த உறவினர்கள் முதலில் பேய் என்று கருதி அச்சமடைந்தனர். பின்னர், அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்தவுடன் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினர்.
“சடலத்தைச் சரியாக அடையாளம் காணாததே இந்தக் குழப்பத்திற்குக் காரணம். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஷியாம் பாபுவின் பெயரில் அடக்கம் செய்யப்பட்ட அந்த உடல் யாருடையது? என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது
