மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு நிதி இல்லை என்று கைவிரித்த முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது தேர்தல் பயம் காரணமாகவே மகளிர் உரிமைத் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக வழங்கியுள்ளார் என்று அவர் சாடினார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் தகுதி பார்க்காமல் அனைத்துப் பெண்களுக்கும் 2,000 ரூபாய் வழங்கப்போவதாக அறிவித்ததைக் கண்டு திமுக அதிர்ந்து போயிருப்பதாகவும், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இதுபோலப் பணத்தைக் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைத்தவர்கள் தேர்தலில் படுதோல்வி அடைந்த வரலாற்றை முதலமைச்சர் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் மக்கள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
செய்தியாளர்கள் தவெக தலைவர் விஜய் பற்றி கேள்வி எழுப்பியபோது, “எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி மோதல், விஜய்யைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” என்று கூறி கைகூப்பி கும்பிட்டார்.
சினிமாவில் எம்ஜிஆர் வில்லன்களை துவைத்து எடுப்பது போல, எடப்பாடி பழனிசாமி தினமும் திமுகவை அரசியல் களத்தில் துவைத்து எடுத்து வருகிறார் என்றும், மக்கள் இனி எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள் என்றும் செல்லூர் ராஜு உறுதியாகத் தெரிவித்தார்.
