இந்தியத் திருமணங்களில் உணவுக்குத்தான் முதலிடம். விதவிதமான பதார்த்தங்கள் நிறைந்த பபே (Buffet) விருந்தில், எதைச் சாப்பிடுவது, எதைத் தவிர்ப்பது என்ற குழப்பத்தைப் போக்க ‘பபே ஜிபிடி’ (BuffetGPT) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் நிபுணரான பங்கஜ் என்பவர் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளார். இது ‘கம்ப்யூட்டர் விஷன்’ (Computer Vision) தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. அதாவது விருந்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுகளை இந்தக் கருவி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
நமது உடல்நலம், தினசரி எடுத்துக்கொள்ளும் கலோரி அளவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எந்த உணவை எவ்வளவு சாப்பிடலாம் என்பதை இது துல்லியமாகப் பரிந்துரைக்கும்.
இதன் மூலம் வயிறு மற்றும் உடல் உபாதைகள் இன்றி, அதிகப்படியான உணவு வகைகளைத் திட்டமிட்டு ருசிக்க முடியும்.
இந்த நூதன யோசனை குறித்து பங்கஜ் கூறுகையில், “பல திருமண விருந்துகளுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் அனைத்து உணவுகளையும் ருசிக்க முடியாமல் போவது வருத்தமாக இருக்கும். அந்த அனுபவமே என்னை இந்தப் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கத் தூண்டியது” என்றார்.
தற்போது இக்கருவி சோதனை கட்டத்தில் (Testing stage) உள்ளது. சமீபத்தில் தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் ‘ஆல்பா’ பதிப்பாகப் பயன்படுத்தப்பட்டபோது, இதற்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இந்த யோசனையைப் பாராட்டி வரும் அதே வேளையில், இதில் கேட்டரிங் நிபுணர்களின் ஆலோசனைகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் பெரிய திருமண விருந்துகளில் உணவுத் தேர்வை எளிதாக்கி, விருந்தினர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தர இந்த ‘பபே ஜிபிடி’ உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது
