கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை, தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இதன்மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை அந்தச் சிறுமி பெற்றுள்ளார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாதப் பெண் குழந்தை, கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தனது தாய் மற்றும் தாத்தா, பாட்டியுடன் கோட்டயத்திலிருந்து திருவல்லாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு கார் மீது இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த பெரியவர்கள் காயமடைந்த நிலையில், குழந்தை அலின் பலத்த காயமடைந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதி அந்தப் பிஞ்சு குழந்தை ‘மூளைச் சாவு’ அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தனது ஒரே மகளைப் பறிக்கொடுத்த ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான ஆபிரகாம் தம்பதியினர் மனிதாபிமானத்துடன் ஒரு முக்கிய முடிவை எடுத்தனர். தங்கள் மகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவர்கள் முன்வந்தனர்.

குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகிய உறுப்புகள் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டன:

இதில் குழந்தையின் கல்லீரல் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.

சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது.

இதய வால்வு மற்றும் கண்கள் ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன. மேலும் மறைந்தும் ஐந்து பேரின் உடலில் உயிர் வாழும் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாமின் செயல், கேரளா முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது