திருச்சியில் பிப்ரவரி 21ம் தேதி நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டிற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள தமது சொந்த ஊரான அரணையூரில் வீடு வீடாகச் சென்ற அவர், வெற்றிலை மற்றும் பாக்கு வைத்து கிராமத்து பாணியில் பொதுமக்களை மாநாட்டிற்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.
இதுவரை கட்சியின் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் தலையிடாமல் இருந்த அன்னம்மாள், தற்போது தனது மகனின் கட்சி மாநாட்டிற்காக முதன்முறையாக நேரடியாகக் களமிறங்கி இருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி, இந்த மாநாட்டின் மூலம் தனது பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்ய உள்ளார்.
இதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களை அழைத்து வரும் நிலையில், சீமானின் தாயாரும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். மாநாட்டிற்கு வர விரும்புவோருக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகின்றனர்.
