தமிழகத்தில் திமுக அரசு முடிவுக்கு வரப்போகிறது; மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 50,000 கொடுத்தாலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமமுக செய்தித் தொடர்பாளர் வீரவெற்றி பாண்டியனின் இல்லத் திறப்பு விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
திரைக்கலைஞர்கள் விஜய் மற்றும் திரிஷா குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கள் அவரது தனிப்பட்ட விமர்சனம். இருப்பினும், அரசியலில் இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது.
தமிழகத்தில் தற்போது கூலிப்படை கலாச்சாரம் உருவாகியுள்ளது. போதைப்பொருள் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை; குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் அவலநிலை நீடிக்கிறது. ‘அம்மாவின் தொண்டர்கள்’ அனைவரும் இப்போது ஒரே அணியில் (அதிமுக கூட்டணி) இணைந்துவிட்டோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் பலமாக அமைந்துள்ளது. இக்கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எங்களிடையே எந்தக் குழப்பமும் இல்லை. அமமுக வரவிருக்கும் தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்திலேயே போட்டியிடும். அதிகாரத்தில் பங்கு கேட்பது போன்ற எண்ணம் எங்கள் கட்சிக்குக் கிடையாது.
“அதிமுக முன்னாள் அமைச்சர்களைத் தோற்கடிக்க சபரீசன் திட்டமிடுகிறாரா?” என்ற கேள்விக்கு, “சபரீசன் அல்ல, மாரீசன் மற்றும் யார் வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை” என்று பதிலளித்தார். மேலும், தமிழகத்தில் இதுவரை மக்கள் கூட்டணி ஆட்சிக்கு அனுமதி தந்ததில்லை என்றும், இந்தத் தேர்தலில் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
