தெலுங்குத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த இவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது உதய்ப்பூரில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடக்கவுள்ளது. இந்தத் திருமண நிகழ்வைத் தொடர்ந்து ஐதராபாத்தில் திரையுலக நண்பர்களுக்காகப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நட்சத்திர ஜோடியின் திருமணத்தைப் படம்பிடித்து ஒளிபரப்ப பிரபல ஓடிடி தளம் ஒன்று சுமார் 60 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாகத் தெரிகிறது. ஆனால், இந்த மிகப்பெரிய தொகையை விஜய் தேவரகொண்டா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
திருமண நினைவுகள் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம் மற்றும் விலைமதிப்பற்றது என்றும், தனது வாழ்வின் முக்கியமான நிகழ்வை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான பணத்தை விடத் தங்களது தனிப்பட்ட மகிழ்ச்சிக்கே இந்த ஜோடி முன்னுரிமை அளித்துள்ளது திரையுலகினரிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
