மலேசியாவைச் சேர்ந்த தொழில்நுட்பத் தொழிலதிபர் அர்சியான் இஸ்மாயில், இணைய வரலாற்றிலேயே மிகப்பெரிய விலைக்கு ஒரு இணையதள முகவரியை விற்று சாதனை படைத்துள்ளார். அவர் 1993-ஆம் ஆண்டு, தனது 10 வயதில் வெறும் 100 டாலர் (சுமார் 300 ரூபாய்) கொடுத்து வாங்கிய ‘AI.com’ என்ற முகவரியை, தற்போது ‘Crypto.com’ நிறுவனத்தின் சிஇஓ கிரிஸ் மார்சலெக்கிற்கு 70 மில்லியன் டாலருக்கு (சுமார் 634 கோடி ரூபாய்) விற்றுள்ளார்.

தொடக்கத்தில் செயற்கை நுண்ணறிவுக்காக இதை அவர் வாங்கவில்லை என்றும், தனது பெயரின் சுருக்கமான ‘AI’ என்ற எழுத்துக்கள் அதில் இருந்ததாலேயே தனது தாயின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அப்போது அவர் அந்த முகவரியை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் (AI) துறை தற்போது உலகளவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த இரண்டு எழுத்து கொண்ட இணையதள முகவரிக்கு கடும் போட்டி நிலவியது. ஏப்ரல் 2025-இல் நடந்த இந்த விற்பனை முழுவதுமாக கிரிப்டோகரன்சி மூலமே பணபரிமாற்றம் செய்யப்பட்டது.

இதன் மூலம் 2010-இல் 49.7 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட ‘CarInsurance.com’ சாதனையை முறியடித்து, உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட இணையதள முகவரியாக இது மாறியுள்ளது. 100 மில்லியன் டாலர் வரை இதற்கு சலுகைகள் வந்தபோதும், ஒரு கோடீஸ்வரருடன் அளவுக்கு அதிகமாக பேரம் பேச வேண்டாம் எனக் கருதி 70 மில்லியன் டாலருக்கு இந்த ஒப்பந்தத்தை அவர் முடித்துள்ளார்.