தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அதிமுக ஐடி விங் சார்பாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. விஜய்யை “பனையூர் பண்ணையார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அதிமுக, அவர் தனது தந்தையின் செல்வாக்கால்தான் சினிமாவிற்குள் வந்ததாகவும், தற்போது மற்ற அரசியல் தலைவர்களின் புகழையும் சித்தாந்தங்களையும் “காப்பி பேஸ்ட்” செய்து அரசியல் நடத்துவதாகவும் சாடியுள்ளது.

இந்த சொந்தமாக ஒரு வரி கூட பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைக் கேள்வி கேட்பதா என்றும், மற்ற கட்சிகளில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களை வைத்துக்கொண்டு ஒரு வாட்ஸ்ஆப் குழுவைத்தான் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் அந்த அறிக்கையில் காரசாரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எம்.ஜி.ஆர், அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி விஜய் அரசியல் செய்ய முயல்வதை அதிமுக கடுமையாக கண்டித்துள்ளது. திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகளை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வது ஒரு வகை கொள்ளை இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, விஜய்க்கு இதில் 30 ஆண்டு கால அனுபவம் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளைப் பின்பற்றிப் பேசிவிட்டு, அதைத் தனது சொந்த “ஆக்‌ஷன்” என விஜய் காட்டிக் கொள்வதாகவும், அவருக்கு முறையான அரசியல் புரிதலோ அல்லது வரலாறோ தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் மிகக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.