சேலம், சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரம்மாண்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பரப்புரைக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (24) என்பவர், விஜய்யின் மீதான ஈர்ப்பால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்ததாகக் கூறப்படுகிறது.

​கூட்டத்தில் நிலவிய அதீத வெயில் மற்றும் மக்கள் நெருக்கடி காரணமாக, சுராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உற்சாகமாகக் காணப்பட்ட கூட்டத்தில், இந்த மரணச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.