சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய TVK தலைவர் விஜய், “தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை மக்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம்; ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் வாக்குகளை அவர்களுக்கு விற்பனை செய்துவிடாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பணம் கொடுப்பவர்களின் காதுகளில் ‘விசில்’ ஊதி அவர்களை அனுப்பி வைக்குமாறும், ஊழல் நிறைந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் காலம் கனிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். தாங்கள் அரசியலுக்கு வந்தது எந்தவொரு தனிப்பட்ட கட்சியையும் அழிப்பதற்காக அல்ல என்றும், இத்தனை காலம் தமக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காகவே இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
அதன்பிறகு , தவெக-விற்கு அரசியல் அனுபவம் இல்லை என விமர்சிப்பவர்களுக்குக் கடும் பதிலடி கொடுத்தார். 75 மற்றும் 50 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கக் கட்சிகளை எதிர்த்துத் தான் களமிறங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “தனித்து நின்று ஒரு சதவீத வாக்குகளைக் கூட உங்களால் வாங்க முடியுமா?” என எதிர் தரப்பினருக்குச் சவால் விடுத்தார். மேலும், மற்றக் கட்சிகளைப் போல ஊழல் செய்து ‘கொள்ளையடிக்கும் அனுபவம்’ தங்களுக்கு ஒருபோதும் வராது எனத் தெரிவித்த விஜய், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களின் கொள்கைகளை மறந்ததுதான் ஆளுங்கட்சியினரின் அனுபவமா? என்றும் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.
