தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சேலத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மக்களை ஒருபோதும் ஏமாற்றப் போவதில்லை என உறுதி அளித்தார்.

தற்போதைய திமுக அரசை ‘மக்கள் விரோத அரசு’ என விமர்சித்த அவர், அதனை வீழ்த்துவதே கட்சியின் முதன்மை நோக்கம் என்றார். மேலும், ஏற்கனவே மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டவர்களை (அதிமுக) நாம் ஏன் எதிர்க்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய விஜய், பிரதான எதிர்க்கட்சியையும் மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.

மேலும் நடைமுறைக்கு ஒத்து வராத அறிவிப்புகளை தான் வெளியிட மாட்டேன் எனவும் எது சாத்தியமோ அதை மட்டும்தான் அறிவிப்பேன் எனவும் விஜய் கூறிய நிலையில் சூப்பரான நல்லாட்சியை என்னால் வழங்க முடியும் எனவும் வாக்கு கொடுத்தார். மேலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் அனைவருக்குமான  அறிக்கையாக அது வெளிவரும் என்றும் விஜய் வாக்கு கொடுத்தார்.

அதே நேரத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் பிரச்சனைக்காக எந்த எல்லைக்கும் சென்று போராட நான் தயார். என்னை நம்பினால் நிச்சயம் நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். நீங்கள் விஜயை நம்புகிறீர்களா அல்லது ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா என்று கேள்வி கேட்டார்.