அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், தென்காசியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது, “என்னை திமுகவிற்குத் துரத்திவிட்டது ஜெயலலிதாவின் ஆவி தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்; அது உண்மைதான்.
டெல்லிக்கு அடகு வைக்கப்பட்ட ஒரு கட்சியில் இருக்காமல், கொள்கை உள்ள திமுகவிற்குச் செல்லுமாறு ஜெயலலிதாவின் ஆவிதான் என்னை வழிநடத்தியது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ‘டெண்டர் கட்சி’ என்று விமர்சித்த மனோஜ் பாண்டியன், எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் மீண்டும் எம்எல்ஏ ஆக முடியாது என்றும், சட்டம் அவரைத் துரத்தும் என்றும் சாடினார்.
குறிப்பாக, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் சிக்கப்போவது உறுதி என்றும், அந்தச் சம்பவம் நடந்தபோது சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது ஏன்? என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
ஆலங்குளம் தொகுதிக்குத் தான் எம்எல்ஏ-வாக இருந்தபோது அரசு கலைக்கல்லூரி, மருத்துவமனை போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உதவி செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று அவர் புகழாரம் சூட்டினார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகனான இவர், அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த பிறகு, தற்போது முதன்முறையாக மேடையில் எடப்பாடி தரப்பை இவ்வாறு விளாசியுள்ளார்.
