பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கும் அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக ஊடகங்கள் திட்டமிட்டே பொய்ப் செய்திகளைப் பரப்புவதாகவும், தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை திமுக அரசு நெறிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் தனது மகன் உதயநிதியை அடுத்த முதல்வராக்கும் முயற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக விமர்சித்தார்.

பாஜகவின் முக்கிய நோக்கம் திமுக ஆட்சியை அகற்றுவதுதான் என்று குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் தே.ஜ. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்றும், இன்னும் ஒரு மாதத்தில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

தான் கோவையில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தினார்.