அமெரிக்காவின் சியாட்டில் நகரில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த ஆந்திர மாநில மாணவி ஜான்வி கண்டுலாவின் குடும்பத்திற்கு, சுமார் 262 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம், சியாட்டில் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 23 வயது மாணவி ஜான்வி சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜான்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒரு அவசர வழக்கிற்காகச் சென்ற அந்த வாகனத்தை ஓட்டிய அதிகாரி கெவின் டேவ், மணிக்கு 40 கி.மீ. செல்ல வேண்டிய இடத்தில் 119 கி.மீ. வேகத்தில் சென்றதே விபத்திற்குக் காரணம் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இந்தத் துயரச் சம்பவத்தின்போது மற்றொரு போலீஸ் அதிகாரி ஜான்வியின் மரணத்தைக் கேலி செய்யும் விதமாக, அவரது உயிருக்கு வெறும் 11,000 டாலர் மதிப்பீடு செய்து சிரித்துப் பேசிய வீடியோ உலகளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் மத்திய அரசு தலையிட்டு நீதி கேட்டு அழுத்தம் கொடுத்த நிலையில், அந்த அதிகாரிகள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஜான்வியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், தற்போது 29 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகையில் பெரும் பகுதியை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவியின் உயிர் அநியாயமாகப் பறிபோன வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய இழப்பீடு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
