ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் படகு சவாரி செய்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்ட தன் குடும்பத்தைக் காப்பாற்ற, 13 வயது சிறுவன் நான்கு மணி நேரம் போராடி நீந்தி கரை சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்டின் ஆப்பல்பீ என்ற அந்தச் சிறுவன், தனது தாய் மற்றும் இரு உடன்பிறப்புகளுடன் குயிண்டலப் கடற்பகுதியில் கயாக்கிங் மற்றும் பேடில்போர்டிங் செய்தபோது, பலத்த காற்றினால் அவர்கள் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த கயாக் படகு நீரில் மூழ்கத் தொடங்கியதும், தன் குடும்பத்தை மீட்க உதவி கோருவதற்காக உயிர்காக்கும் அங்கியைக்கூட கழற்றிவிட்டு, ஆஸ்டின் துணிச்சலாக 4 கிலோமீட்டர் தூரம் நீந்தி கரை திரும்பினான். கரைக்கு வந்தவுடன் மயக்கமடையும் நிலையிலும், ஆஸ்டின் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு, “எங்களுக்கு ஒரு ஹெலிகாப்டர் தேவை, நான் இப்போது மயக்கமடையப் போகிறேன்…” என்று பதற்றத்துடன் ஆனால் தெளிவாகப் பேசினான்.
View this post on Instagram
“>
இந்நிலையில் அவனது தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புக் குழுவினர், கடலில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த அவனது தாய் ஜோன் மற்றும் உடன்பிறப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். நடுக்கடலில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட அந்தக் குடும்பத்தினர், ஆஸ்டினின் அபார துணிச்சலையும் விடாமுயற்சியையும் கண்டு நெகிழ்ந்து போயுள்ளனர். ஆஸ்திரேலிய காவல்துறை இந்தச் சிறுவனின் வீரதீரச் செயலை “மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது” என்று பாராட்டியுள்ளது.
