தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் கடந்த 45 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மருத்துவர் பொன்னையா (90) நேற்று காலமானார். வெறும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்டு, உரிய மருந்துகளுடன் மிகக் குறைந்த செலவில் அவர் மருத்துவம் பார்த்து வந்தார். பணத்தை விட மனிதநேயமே முக்கியம் என வாழ்ந்து காட்டிய அவரது மறைவு, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி ரூ10, ரூ.20 என குறைந்த செலவில் உரிய மருந்துகளுடன் ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பொன்னையா 90 வயதில் காலமானார். க்ளினிக்கில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.#Thiruchendur | #Death pic.twitter.com/zyjqhFqQBD
— PttvOnlinenews (@PttvNewsX) February 12, 2026
அவரது கிளினிக்கில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரிடம் சிகிச்சை பெற்றுப் பயனடைந்த முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை, “நாங்கள் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை இழந்துவிட்டோம்” என்று தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தனர். “எங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடி வரும் அந்த நல்ல உள்ளத்தின் குடும்பத்திற்குத் தாங்கள் எப்போதும் துணையாக இருப்போம்” என்று உருக்கமாகக் கூறி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
