டெல்லியின் பீராகர்ஹி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரான ரந்தீர் என்பவர் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டிருந்தவர் என்றாலும், பேராசையினால் தனது பணத்தை இரட்டிப்பாக்க கமாருதீன் என்ற மௌலானாவை அணுகியுள்ளார்.
மற்றொரு பெண்ணும் தனது கணவரின் மருத்துவ சிகிச்சைக்காக இந்த பாபாவை நம்பிச் சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் மர்மமான முறையில் காருக்குள்ளேயே உயிரிழந்து கிடந்தது போலீஸாரின் தீவிர விசாரணைக்கு வழிவகுத்தது.
போலீஸாரின் விசாரணையில், கைதான கமாருதீன் ஒரு மோசடி நபர் என்பது தெரியவந்தது. பணத்தை இரட்டிப்பாக்கும் ‘அதிசயம்’ செய்வதாகக் கூறி மக்களை நம்ப வைத்து வந்த அவர், சம்பவத்தன்று காரில் இருந்தவர்களுக்கு ஏதோ ஒரு மயக்க மருந்தைக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் இருந்த 2 லட்சம் ரூபாயைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
உயிரிழந்தவர்கள் அந்த நச்சு கலந்த பொருளை உட்கொண்டதால் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தத் திட்டத்தை அரங்கேற்ற அவர் கடந்த சில மாதங்களாகவே அவர்களைத் தனது பேச்சால் மூளைச்சலவை செய்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட கமாருதீன், பீராகர்ஹி கொலைகள் மட்டுமன்றி இதுவரை மொத்தம் 6 கொலைகளைச் செய்திருப்பதாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே அவர் மீது பல வழக்குகள் இருந்தாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் தப்பி வந்துள்ளார்.
தற்போது செல்போன் சிக்னல் மற்றும் பிற தடயங்கள் மூலம் போலீஸார் அவரை லோனி பகுதியில் பிடித்துள்ளனர். எளிதில் பணக்காரராக வேண்டும் என்ற பேராசையை முதலீடாக வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி வந்த ஒரு மோசடி பாபாவின் கொடூர முகம் இந்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
