தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். அப்போதைய வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் இவருக்கும் இடையே நிலவி வந்த மோதல் காரணமாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதற்கிடையில், அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக நிலோபர் கபில் மீது புகார் எழுந்தது. இதன் விளைவாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் கட்சியில் இணைந்த போதிலும், அவருக்கு எந்தப் பொறுப்புகளும் வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.
தற்போது நிலோபர் கபில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 14-ஆம் தேதி ஜோலார்பேட்டை பொன்னேரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில், அவர் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணையவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த ஒருவர் திமுகவில் இணையவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
