உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாகக் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு வந்த பெண் ஒருவர் உயிருடன் காவல் நிலையம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பில்காயேன் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா பிரஜாபதி என்பவருக்கும் சந்தீப் என்பவருக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரியங்கா தனது குழந்தையுடன் மாயமானார். மகளைக் காணவில்லை எனப் பெற்றோர் புகார் அளித்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்த கணவர் சந்தீப், நீதிமன்றத்தை நாடினார்.
இதன் அடிப்படையில், பிரியங்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சூழலில், செய்யாத குற்றத்திற்காகப் பிரியங்காவின் குடும்பத்தினர் சமூகத்தில் கடும் அவமானத்தைச் சந்தித்து வந்தனர்.
இந்த மர்மமான வழக்கில் எதிர்பாராத திருப்பமாக, ராஜஸ்தானில் வசித்து வந்த பிரியங்கா தனது அடையாள அட்டையில் புகைப்படம் மற்றும் பெயரை மாற்ற முயன்றபோது, அவரது கணவர் சந்தீப்பின் கைபேசிக்கு கடவுச்சொல் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் மூலம் தனது மனைவி உயிருடன் இருப்பதை உறுதி செய்த சந்தீப், காவல்துறையிடம் தகவல் அளித்தார்.
விசாரணையில், தற்கொலை செய்ய எண்ணிய பிரியங்கா அயோத்தி சென்றபோது, அங்கு ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் மணம் முடித்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
கொலை வழக்குப் பதிவாகி விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தான் உயிருடன் இருப்பதை நீதிமன்றத்தில் நேரில் வந்து பிரியங்கா உறுதி செய்ததைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது இந்த விசித்திரமான வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
