அமெரிக்கா தங்களைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் தேவையற்ற காகிதத்தைப் போல் தூக்கி எறிந்துவிட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மண்ணில் நடைபெற்ற போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது இஸ்லாமிய மதத்தைப் பாதுகாப்பதற்கான புனிதப் போர் அல்ல என்றும், அது அமெரிக்காவின் அரசியல் லாபத்திற்காகத் திணிக்கப்பட்டது என்றும் அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
முன்னாள் ராணுவ ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் இளைஞர்கள் ஜிஹாத் என்ற பெயரில் பலிகடா ஆக்கப்பட்டதாகவும், இதற்காக அந்நாட்டின் கல்வித் திட்டமே மாற்றியமைக்கப்பட்டு இன்றும் அதன் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மைமென்சிங் மாவட்டத்தில் 62 வயதான இந்து அரிசி தொழிலதிபர் சுசென் சந்திர சர்க்கார் என்பவர், அவரது கடைக்குள்ளேயே மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடையில் இருந்த பணத்தைச் சூறையாடிவிட்டுச் சென்ற இந்தக் கும்பல் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் இந்து சமூகத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
