டி20 உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கவலையளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் நாளை (பிப்ரவரி 12) நமீபியா அணிக்கு எதிரான முக்கியமான போட்டி நடைபெற உள்ள நிலையில், அணியின் முக்கிய வீரரான இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, அவருக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான உபாதை காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் அவரது உடல்நிலை குறித்து மேலதிக தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரின் போது வீரர்களின் உடல்நலம் மிக முக்கியமானது என்பதால், அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் மைதானத்திற்குத் திரும்ப வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.