திருச்சி தொகுதியில் திமுக சந்தித்த கடுமையான வாக்குச் சரிவு குறித்து முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மேடையில் மிகவும் எமோஷனலாகப் பேசியுள்ளார். கடந்த முறை ஆட்சியில் பொதுமக்கள் 85,000-க்கும் அதிகமான வாக்குகளை வழங்கிப் பெரும் ஆதரவு தந்த நிலையில், இந்த முறை வெறும் 4,786 வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பது தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

தாங்கள் ஏதேனும் தவறு செய்து மக்கள் நிராகரித்திருந்தால் கூட பரவாயில்லை என்றும், எந்தத் தப்பும் செய்யாமல் ஏன் இந்தத் தோல்வி மற்றும் நிராகரிப்பு என்று தமக்கு இன்னும் புரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த வீழ்ச்சியால் தாங்கள் சோர்ந்து போகப் போவதில்லை என்றும், இன்னும் கூடுதலாக உழைத்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம் என்றும் அவர் அதிரடியாகத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

​மேலும், தனது உரையின் போது திமுக ஆட்சியில் திருச்சி மாநகரத்திற்குச் செய்த பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பெருமிதத்துடன் பட்டியலிட்டார். இந்த திருச்சி மாநகரத்திற்கு மட்டுமே 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் தரமான சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளதாகக் கூறினார்.

குறிப்பாக, திருச்சி கார்ப்பரேஷன் பகுதியில் பட்டா வழங்கவே முடியாது என்ற நிலை நீண்ட காலமாக நீடித்து வந்ததாகவும், ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் சிறப்புத் தீர்மானம் போட்டு, 40 மற்றும் 50 வருடங்களாகப் பட்டா இல்லாமல் தவித்த 15,000 பேருக்குப் பட்டா வழங்கிப் புரட்சி செய்ததாகக் கூறி, இவ்வளவு செய்தும் மக்கள் ஏன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்கள் என்ற கேள்வியோடு தனது உரையை முடித்தார்.