பாகிஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஹைதர் அலியின் கிரிக்கெட் பயணம் மிகுந்த மனஉறுதி கொண்டது. சிறுவயதில் கிரிக்கெட் விளையாடத் தடை, லாகூரில் பிழைப்புக்காக நள்ளிரவு வரை ஹோட்டலில் வெயிட்டர் வேலை எனப் பல தடைகளைத் தாண்டினார்.
கொரோனா காலத்தில் பழ வியாபாரியாக மாறிய அவர், ஒரு கோரமான விபத்தில் சிக்கி 30 அடி உயரத்திலிருந்து விழுந்ததில் உடல் சிதைந்து, “இனி நடக்கவே முடியாது” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஆனால், அந்த மரணப் போராட்டத்திலிருந்து மீண்டு வந்த அவர், கையில் வெறும் 10 ரூபாயுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தனது புதிய வாழ்வைத் தொடங்கினார்.
கடும் உழைப்பால் 2025-ல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி, தனது அணிக்கு வரலாற்று வெற்றியைத் தேடித்தந்தார். லாகூர் தெருக்களில் பழம் விற்ற ஒரு சாதாரண இளைஞன், இன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பது பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
2026 டி20 உலகக்கோப்பையில் தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கி விளையாடுவதே தனது மிகப்பெரிய லட்சியம் என்று ஹைதர் அலி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
