டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு, பின்னர் அமைதியாக விளையாடச் சம்மதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இரட்டை நிலையை அந்த நாட்டு முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வாரியத் தலைவர் மோசின் நக்வியை விளாசிய அக்தர், “உறுதியான முடிவை எடுக்கத் துணிச்சல் இல்லாதபோது எதற்காகப் பெரிய வார்த்தைகளைப் பேச வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய செயலால் பாகிஸ்தான் அரசு மற்றும் நாட்டின் கௌரவம் உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடிக்கடி எடுக்கும் இந்த ‘யூ-டர்ன்’ முடிவுகளை இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தார். முதலில் புறக்கணிப்போம் என்று மிரட்டுவதும், பிறகு ஐசிசி அழுத்தத்திற்குப் பணிந்து சரணடைவதும் பாகிஸ்தானின் வழக்கமான செயலாகிவிட்டது என்று அக்தர் சாடியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதேபோல ‘ஹைப்ரிட் மாடல்’ முறைக்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர், நிர்வாகத்தின் இத்தகைய குளறுபடிகளால் உலக கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் ஒரு கேலிப்பொருளாக மாறி வருவதாகக் கூறினார்.

அரசியலையும் விளையாட்டையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத நிர்வாகிகளால் வீரர்களின் மனோபாவம் பாதிக்கப்படுவதாக அக்தர் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் வாரியம் சமூக வலைதள அழுத்தங்களுக்குப் பணிந்து வீரவசனம் பேசாமல், தெளிவான மற்றும் நிலையான கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானின் மிரட்டல்கள் வெறும் “வெற்று மிரட்டல்” தான் என்று இந்தியத் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், சொந்த நாட்டு வீரரே வாரியத் தலைவரைக் கடுமையாகச் சாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.