பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் ‘மாம்பழம்’ சின்னத்தை யாருக்குச் சொந்தம் என்பதில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நீண்டகாலமாகப் போட்டி நிலவி வருகிறது.

தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்துள்ளதாக அன்புமணி தரப்பு கூறி வரும் நிலையில், ராமதாஸ் தரப்போ இது போலி ஆவணங்கள் மூலம் செய்யப்பட்ட சதி என மறுத்து வருகிறது.

இந்தச் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்க ‘பிளான்-பி’ என்ற புதிய வியூகத்தை ராமதாஸ் கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய அமைப்பைப் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், பாமக கொடியின் வண்ணங்களோடு ராமதாஸின் முகம் பதித்த புதிய கொடி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனது தீவிர ஆதரவாளரான அன்பழகனின் மகன் முகிலனைத் தலைவராகக் கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், இந்தப் புதிய கட்சி குறித்த தகவல்களை ராமதாஸ் தரப்பு தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாமல் மறுத்து வருகிறது.