திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு விசிக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, சாதியவாத பாமகவும் மதவாத பாஜகவும் இல்லாத கூட்டணியில் மட்டுமே விசிக தொடரும் என்பதில் தங்கள் தலைவர் திருமாவளவன் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த முடிவு தனிப்பட்ட விருப்பம் அல்ல என்றும், சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு என்றும் அவர் விளக்கமளித்தார்.

முன்னதாக, “இருவரும் பேசினால் சமரசம் ஏற்படும்” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறிய கருத்தை வன்னியரசு கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல்களைச் சரி செய்வதே அவரது முதல் வேலையாக இருக்க வேண்டும் என்றும், மற்ற கட்சிகளின் கூட்டணி விவகாரங்களில் தலையிடுவது நல்ல அரசியல் பண்பல்ல என்றும் அவர் சாடினார்.

மேலும், செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சு வெறும் விளம்பர அரசியலே தவிர, நல்ல நோக்கம் கொண்டது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே விசிக எம்.எல்.ஏ பாலாஜியும் செல்வப்பெருந்தகையின் கருத்துக்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், வன்னியரசுவின் இந்தப் பேச்சு திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் யார் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை திமுக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும், சாதிய சக்திகளை இணைப்பது திமுகவிற்கும் ஏற்றதாக இருக்காது என்றும் விசிக தரப்பு எச்சரித்துள்ளது.