தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட்டது குறித்து நிலவும் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார். கேசவ விநாயகம் நீண்ட காலம் பாஜகவில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்றும், அவரை ஆர்எஸ்எஸ் இயக்கம் பாஜகவின் பணிக்காக வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் தேவைப்படுவதால், அவர் அங்கேயே ஒரு புதிய பொறுப்புக்குத் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டார் என்றும், மற்றபடி இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார். மேலும், தனக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே எந்தப் பனிப்போரும் இல்லை என்று அவர் கூறினார்.

மத்திய அரசின் சாதனைகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு 18% சிறப்புச் சலுகை கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிபந்தனையுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா தனது இறையாண்மைக்குப் பாதிப்பு இல்லாமல் இந்தச் சலுகையைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

2009 முதல் 2013 வரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸால் செய்ய முடியாத விஷயங்களை பாஜக அரசு செய்து வருவதாகவும், இது தொடர்பாக ராகுல் காந்தி முன்வைக்கும் விமர்சனங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் விமர்சித்தார்.

தமிழகத்திற்குப் பல்வேறு புதிய திட்டங்கள் வந்துள்ளதை அண்ணாமலை பட்டியலிட்டார். சென்னை-பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இணைப்புக்கான அதிவேக ரயில் திட்டங்கள், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தகத் திட்டங்கள் மற்றும் 6 பெரிய பூங்காக்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தால் தான் அதன் உண்மை நிலை தெரியும் என்றும் அவர் காட்டமாகப் பதில் அளித்தார்.

எரிபொருள் கொள்முதல் விஷயத்தில் இந்தியா தனது நலனை முன்னிறுத்திச் செயல்படுவதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.