சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தில் உயர்மட்ட மேலாளராகப் பணியாற்றி வந்த யுவே லி என்ற பெண், தனது 20 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து மக்கள் வசிக்காத ஒரு தனித் தீவில் குடியேறியுள்ளார்.
நகர வாழ்க்கையின் நெரிசல் மற்றும் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட அவர், அமைதியைத் தேடி கிழக்கு சீனக் கடலில் உள்ள டோங்ஜாய் தீவில் மீன்களுக்கு உணவளிக்கும் மையத்தில் தர ஆய்வாளராகப் பணியில் சேர்ந்துள்ளார்.
சுமார் 300 நாட்கள் தொழில்முறைப் பயணங்கள் மற்றும் தினமும் நான்கு மணிநேரப் பயணக் களைப்பு ஆகியவற்றால் சோர்வடைந்திருந்த அவர், தற்போது சுமார் 40 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் இந்த எளிய வாழ்க்கையைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தத் தனித்தீவு வாழ்க்கையில் பல சவால்கள் இருப்பதாக யுவே லி தெரிவித்துள்ளார். கடல் சீற்றம் மற்றும் கடுமையான புயல் வீசும் காலங்களில் சமைக்கக் கூட முடியாத சூழல் நிலவுவதாகவும், எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், நகரத்தின் இரைச்சல் இன்றி கடற்கரையில் அமர்ந்து புத்தகம் வாசிப்பது, மீன் மற்றும் நண்டுகளைப் பிடித்து உண்பது எனத் தனது புதிய வாழ்க்கையை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார்.
இந்த மாற்றம் தனக்கு மன அமைதியையும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளதாக அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள செய்திகள் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
