டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் அமெரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்தீப் சிங் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் எஹ்சான் அதில் அமெரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 5-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, அமெரிக்க வீரர் ஜஸ்தீப் சிங்கிற்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது காயம் தீவிரமடைந்துள்ளதால் அவர் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஐசிசி தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுடன் எஹ்சான் அதில் அணியில் இணைந்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அமெரிக்க அணிக்கு, மேலும் ஒரு பின்னடைவாக அலி கான் மற்றும் சுப்ஹம் ரஞ்சனே ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.
அலி கான் பீல்டிங் செய்யும் போதும், ரஞ்சனே பந்துவீசும் போதும் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடுவது சந்தேகமே.
இவர்களுக்குப் பதிலாக ருஷில் உகர்கர் அணியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்புவில் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் அமெரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 2024 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா, இம்முறையும் அதே போன்றதொரு அதிர்ச்சியை அளிக்கக் காத்திருக்கிறது.
இருப்பினும், முன்னணி பந்துவீச்சாளர்கள் காயத்தால் அவதிப்படுவது அமெரிக்க அணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான தோல்விக்குப் பிறகு, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய அமெரிக்கா இன்று கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
