கனடாவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகேயுள்ள நெலமங்களாவைச் சேர்ந்த 37 வயதான சந்தன் குமார், கடந்த 7 ஆண்டுகளாகக் கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் தங்கியிருந்து முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவில் உள்ள வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் அவர் தனது காரில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டொராண்டோவில் ‘கன்னட சங்கம்’ ஒன்றை உருவாக்கி சந்தன் குமார் சிறப்பாக நடத்தி வந்ததாகவும், அந்தச் சங்கத்தின் செயல்பாடுகளால் ஏற்பட்ட மோதலே இந்தத் திட்டமிட்ட கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரது தந்தை நந்தகுமார் கூறுகையில், “பலமுறை கேட்டும் அவர் நாடு திரும்பவில்லை, இப்படி ஒரு கொடுமை நடக்கும் என்று நினைக்கவில்லை” என கண்ணீருடன் தெரிவித்தார். உயிரிழந்த மகனின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் அவர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.