மத்தியப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட துபாய் தொழிலதிபர் சதீஷ் சன்பால், தனது மனைவிக்காக ஆண்டுதோறும் 3 கிலோ தங்கம் வாங்கித் தரும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சதீஷ் சன்பால் (40), வறுமை காரணமாக 8-ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை கைவிட்டார். மகனின் முன்னேற்றத்திற்காக அவரது தாய் தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.50,000-ஐ வழங்கினார். அந்தச் சிறு முதலீட்டுடன் துபாய் சென்ற சதீஷ், அங்கு மளிகைக் கடை ஒன்றைத் தொடங்கினார்.
கடின உழைப்பால் ரியல் எஸ்டேட், ஹோட்டல் மற்றும் நிதிச் சேவைத் துறைகளில் தடம் பதித்த அவர், 2018-ல் ‘அனக்ஸ் ஹோல்டிங்’ நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று அதன் மதிப்பு ரூ.8,000 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போது உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் அவர் வசித்து வருகிறார்.
காதல் திருமணம் பிரிட்டனைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளிப் பெண்ணான தபின்டாவை சதீஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதம் வேறாக இருந்ததால் இவர்களது திருமணத்திற்குத் தொடக்கத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பின் சதீஷின் நற்பண்புகளால் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள ‘டெஸி பிளிங்’ (Desi Bling) என்ற நிகழ்ச்சியில் தனது கணவர் குறித்து தபின்டா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்:
“என் கணவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். எனக்காக ஆண்டுதோறும் 3 கிலோ தங்கத்தை அவர் பரிசாக வழங்குகிறார்.”
தற்போதைய சந்தை மதிப்பின்படி, ஒரு கிலோ தங்கம் ரூ.1.5 கோடி என கணக்கிட்டால், ஆண்டுக்கு ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கத்தை அவர் தனது மனைவிக்காகச் செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் குறித்துப் பேசிய சதீஷ் சன்பால், “பணம் ஒன்றும் கடவுள் அல்ல; ஆனால் அது கடவுளுக்கு இணையான மரியாதையைப் பெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். வறுமையில் தொடங்கி இன்று உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ள சதீஷின் வாழ்க்கை வரலாறு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
