மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற பாகேஸ்வர் தாம் பீடாதிபதி தீரேந்திர சாஸ்திரி நடத்தும் ஆன்மீகக் கூட்டங்களில் எப்போதுமே வினோதமான சம்பவங்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பத்திரிகையாளர் மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒரு இளம்பெண்ணிடம் பேட்டி எடுக்கிறார். அந்தப் பெண்ணுக்குப் பேய் பிடித்துள்ளதாகக் கூறி சிகிச்சைக்காக அங்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரிடம் நரேந்திர மோடியைப் பற்றி கேட்டபோது “அவர் தான் பிரைம் மினிஸ்டர்” என்றும், “பிஜேபி ஜிந்தாபாத்” என்றும் கூறுகிறார். ஆனால், அதே சமயம் “சன்னியாசி பாபா (தீரேந்திர சாஸ்திரி) முர்தாபாத்” என கோஷம் எழுப்புகிறார்.

​ஏன் சாமியாரைத் திட்டுறீங்க? எனப் பத்திரிகையாளர் கேட்டதற்கு, “அவர் என்னைப் பச்சைக் குழந்தையை நரபலி கொடுக்க விடமாட்டேங்கிறார், அதான் முர்தாபாத்” என்று அந்தப் பெண் சொல்லும் பதில் பார்ப்பவர்களை அதிரவைக்கிறது. அதோடு விடாமல் காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் மாற்றி மாற்றி ஜிந்தாபாத், முர்தாபாத் கோஷங்களை அந்தப் பெண் எழுப்புவது பெரும் வேடிக்கையாக மாறியுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், “உலகத்திலேயே பேய்க்கிட்ட அரசியல் பேட்டி எடுத்த முதல் ஆள் இவர்தான்” எனக் கிண்டல் செய்து வருகின்றனர். ஒருபுறம் இது நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இது போன்ற மூடநம்பிக்கை சார்ந்த இடங்களுக்குப் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்வது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.